தினமும் Shorts மற்றும் எங்கள் அனைத்து வீடியோ மற்றும் வெளியீடுகளை பெற எங்களுடைய Whatapp குரூப்பில் இனையுங்கள்.
வேதப்பகுதி: அப்போஸ்தலர் 27 மற்றும் 28-ஆம் அதிகாரங்கள்
தேவன் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை வைத்திருக்கும்போது, இயற்கையின் சீற்றங்களோ, சூழ்நிலைகளின் அழுத்தங்களோ அல்லது சத்துருவின் நஞ்சோ உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது.
கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு பெரிய கேள்வி: “ஏன் அடுத்தடுத்து போராட்டங்கள் வருகின்றன?” ஒரு பெரிய புயலில் இருந்து தப்பித்தோம் என்று பெருமூச்சு விடுவதற்குள், அடுத்த சோதனை வருகிறது. இது பல விசுவாசிகளின் நிஜ வாழ்க்கை அனுபவம்.
அப்போஸ்தலர் 27 மற்றும் 28 அதிகாரங்களில் பவுலின் வாழ்க்கை 14 நாட்கள் மரணப் போராட்டம், கப்பல் சேதம், நீந்திக் கரைசேர்ந்த களைப்பு. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம் என்று நெருப்பு மூட்டினால், அங்கே ஒரு கொடிய விஷப்பாம்பு! “ஆண்டவரே, இதைவிட நான் கடலிலேயே இறந்திருக்கலாமே” என்று முறுமுறுக்கக் கூடிய சூழ்நிலை. ஆனால் பவுலின் எதிர்வினை, வேதாகமத்தின் மிக ஆழமான சத்தியங்களில் ஒன்றைக் கற்பிக்கிறது. தேவன் நம்முடைய வாழ்வில் ஒரு நோக்கத்தை வைத்திருந்தால், அந்த நோக்கம் நிறைவேறும் வரை பூமியில் உள்ள எந்த சக்தியாலும் நம்மை அழிக்க முடியாது.
- இயற்கையின் சீற்றம்: புயலின் நடுவில் தேவனுடைய சித்தம்
அப்போஸ்தலர் 27-ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள கப்பற்சேதம், வேதாகமத்தில் உள்ள மிகத் துல்லியமான கடல் பயணப் பதிவுகளில் ஒன்றாகும். இந்த ஒரு சம்பவம், நம்முடைய வாழ்க்கையில் வரும் புயல்களைப் பற்றியும், அதில் தேவனுடைய சித்தம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றியும் பல ஆழமான சத்தியங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
மனித ஆலோசனையா? தேவனுடைய எச்சரிப்பா?
அப்போஸ்தலர் 27:10-11
“அவர்களை நோக்கி: மனுஷரே, இந்தப் பிரயாணத்தினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமுமுண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று எச்சரித்தான். நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப்பார்க்கிலும், மாலுமியையும் கப்பல் எஜமானனையும் அதிகமாய் நம்பினான்.”
கப்பல் புறப்படுவதற்கு முன்பே, இது ஆபத்தான பயணம் என்று தேவன் பவுலின் மூலமாக எச்சரிக்கிறார். ஆனால் நூற்றுக்கு அதிபதியோ, ஒரு தேவ மனிதனின் வார்த்தையை விட, உலக அறிவில் சிறந்த மாலுமியையும் , கப்பலின் உரிமையாளரையும் அதிகம் நம்பினான்.
நம்முடைய வாழ்க்கையில் பல புயல்கள் வருவதற்கு முக்கியக் காரணம், தேவனுடைய வார்த்தையை விட உலகத்தின் நிபுணர்களையும், அறிவாளிகளையும் நாம் அதிகம் நம்புவதுதான். உலகம் ஒரு பாதையை “மிகவும் பாதுகாப்பானது, லாபகரமானது” என்று சொன்னாலும், தேவன் அதை “ஆபத்து” என்று தடுத்தால், நாம் தேவனுடைய சத்தத்துக்கே கீழ்ப்படிய வேண்டும்.
ஏமாற்றும் தென்றலும், எதிர்பாராத கடுங்காற்றும்
அப்போஸ்தலர் 27:13-14
“தென்றல் மெதுவாயடித்தபடியினால், தாங்கள் கோரியது கைகூடிவந்ததென்று எண்ணி, நங்கூரத்தை எடுத்து, கிரேத்தாதீவின் கரையோரமாகப் போனார்கள். கொஞ்சநேரத்துக்குள்ளாக யூரோக்கிலிடன் என்னும் கடுங்காற்று அதின்மேல் மோதிற்று.”
அவர்கள் தேவனுடைய வார்த்தையை மீறிப் பயணத்தைத் தொடங்கியபோது ஆரம்பத்தில் “தென்றல் காற்று” மிக மெதுவாகவும் இதமாகவும் வீசியது. “பார்த்தீர்களா, நாம் எடுத்த முடிவு சரியானதுதான்” என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அந்த மெதுவான காற்று ஒரு மிகப்பெரிய ஏமாற்று வேலை. கொஞ்ச நேரத்திற்குள்ளாக ‘யூரோக்கிலிடன்’ (சூறாவளி போன்ற பயங்கரமான புயல்) அவர்களைத் தாக்கியது.
தேவனுக்குச் சித்தமில்லாத தவறான முடிவுகளும், பாவ வழிகளும் ஆரம்பத்தில் ‘தென்றலை’ போல மிகவும் இதமாக, லாபகரமாகத் தான் தோன்றும். எல்லாம் சரியாக நடப்பது போலத் தெரியும். ஆனால், அந்தச் சுகமான தென்றலுக்குப் பின்னால் அழிவின் புயல் மறைந்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
உலகத்தின் பலம் தோற்றுப்போகும் தருணம்
அப்போஸ்தலர் 27:18-20
“நாங்கள் பெருங்காற்றினாலே மிகவும் அலைக்கழிக்கப்பட்டபடியினால், மறுநாளிலே சில சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள். மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே தூக்கி எறிந்தோம். அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், பெருங்காற்றும் மழையும் அடித்துக்கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போம் என்கிற நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று.”
புயல் வந்தவுடன் அந்த அனுபவமிக்க மாலுமிகள் தங்கள் உயிரைக் காப்பாற்ற என்ன செய்தார்கள்? வியாபாரத்திற்காக ஆசையாகக் கொண்டுவந்த சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள். கடைசியாக, தங்கள் தொழிலின் ஆதாரமான கப்பலின் தளவாடங்களையே வீசி எறிந்தார்கள். பல நாட்கள் சூரியனும் தெரியவில்லை, நட்சத்திரமும் தெரியவில்லை. காரிருள்! பிழைப்போம் என்ற நம்பிக்கை முழுவதுமாக அற்றுப்போனது.
வாழ்க்கையில் மரணத்தை தொடும் அளவிலான ஒரு பெரிய புயல் வரும்போது, மனிதன் சேர்த்து வைத்த பணம், பதவி, கல்வி, செல்வாக்கு எதுவுமே அவனைக் காப்பாற்ற முடியாது. “என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என் சொத்து முழுவதையும் கொடுக்க நான் தயார்” என்று மனிதன் தன் சுய பலத்தின் எல்லைக்கு வரும்போதுதான், அவனுக்குத் தேவனுடைய கிருபை தேவைப்படுகிறது.
இருளில் தேவனுடைய சத்தம்
அப்போஸ்தலர் 27:23
“ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று…”
எல்லாரும் நம்பிக்கையிழந்து, இருளில் மரணத்திற்காகக் காத்துக்கொண்டிருந்த அந்த இரவில், பவுல் எழுந்து நிற்கிறார். அவர் தன்னை எப்படி அறிமுகப்படுத்துகிறார் என்பதைக் கவனியுங்கள். “ என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான “
புயலின் நடுவில் நீங்கள் எவ்வளவு பெரிய ஆள் என்பதை விட, நீங்கள் யாருக்குச் சொந்தமானவர்கள் என்பதே உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும். நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் என்றால், அந்தப் புயலின் நடுவிலும் உங்களைப் பாதுகாக்க வேண்டியது அவருடைய பொறுப்பு. உலக மக்கள் புயலைக் கண்டு பயந்து நடுங்கும்போது, ஒரு தேவ பிள்ளை புயலின் நடுவிலும் தேவ தூதனின் தரிசனத்தைக் காண்பான்.
தேவன் கொடுத்த நோக்கமே உங்களைப் பாதுகாக்கும் கவசம்
அப்போஸ்தலர் 27:24
“பவுலே, பயப்படாதே; நீ ராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும்; இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.”
தேவன் பவுலிடம் “நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று மட்டும் சொல்லவில்லை. அதற்கான காரணத்தையும் சொல்கிறார்: “நீ ராயனுக்கு (ரோமப் பேரரசனுக்கு) முன்பாக நிற்கவேண்டும்.” ரோமாபுரியில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டிய ஒரு பணி பவுலுக்கு மீதம் இருந்தது. அந்தப் பணி முடியும் வரை, உலகத்தின் எந்தக் கடலும் பவுலை மூழ்கடிக்க முடியாது.
தேவன் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை வைத்திருக்கும்போது, புயல் உங்களை அழிக்க முடியாது. மாறாக, அந்தப் புயலே உங்களை உங்கள் இலக்கில் சீக்கிரமாகக் கொண்டு சேர்க்கும் ஒரு வாகனமாகப் பயன்படுகிறது. தேவன் உங்கள் மேல் வைத்த நோக்கத்தினிமித்தம், உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் அவர் ஆசீர்வதித்துப் பாதுகாப்பார்.
- உடைந்த துண்டுகள்: இழப்புகளின் வழியே இரட்சிப்பு
அப்போஸ்தலர் 27-ஆம் அதிகாரத்தின் இறுதிப் பகுதி, நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகளையும், உடைந்த சூழ்நிலைகளையும் தேவன் எப்படி நம்முடைய இரட்சிப்பிற்கும், ஆசீர்வாதத்திற்கும் பயன்படுத்துகிறார் என்பதை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
நாம் நம்பியிருந்த ‘கப்பல்’ உடையும் தருணம்
அப்போஸ்தலர் 27:41
“இருபுறமும் கடல்மோதும் ஒரு மேட்டிலே கப்பலை விழத்தள்ளினார்கள்; முன்னணியம் ஊன்றி அசையாமலிருந்தது, பின்னணியம் அலைகளின் பலத்தினாலே உடைந்துபோயிற்று.”
பதினான்கு நாட்களாக அவர்களைச் சுமந்து வந்த கப்பல், இப்போது ஒரு மேட்டில் தட்டி நிற்கிறது. கப்பலின் முன்பகுதி (முன்னணியம்) அசையாமல் சிக்கிக்கொண்டது. ஆனால் பின்பகுதி (பின்னணியம்) அலைகளின் பயங்கரமான பலத்தினால் சுக்குநூறாக உடையத் தொடங்குகிறது. அவர்கள் இதுவரை பாதுகாப்பாக நம்பியிருந்த கப்பல், இப்போது கண்முன்னே அழிகிறது.
வாழ்க்கையில் சில நேரங்களில், நாம் மிகவும் பாதுகாப்பானது என்று நம்பியிருந்த ‘கப்பல்களை’ தேவன் உடைய அனுமதிக்கிறார். அது ஒரு வேலையாக இருக்கலாம், நாம் நம்பியிருந்த மனிதர்களாக இருக்கலாம், அல்லது நமது சொந்த பலமாக இருக்கலாம். நாம் தேவனிலும் அதிகமாக அந்த உலகக் காரியங்களை நம்பத் தொடங்கும்போது, அந்தத் தவறான நம்பிக்கையை உடைத்து, ‘தேவன் ஒருவரே நமது தஞ்சம்’ என்பதைப் புரியவைக்கவே இப்படிப்பட்ட இழப்புகளை அவர் அனுமதிக்கிறார்.
சத்துருவின் திட்டம் தடுத்து நிறுத்தப்படுதல்
அப்போஸ்தலர் 27:42-43
“காவல்பண்ணப்பட்டவர்களில் ஒருவனும் நீந்தித் தப்பிப்போகாதபடிக்கு, அவர்களைக் கொன்றுபோடவேண்டுமென்று போர்ச்சேவகர் யோசனையாயிருந்தார்கள். நூற்றுக்கு அதிபதி பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து…”
கப்பல் உடைகிறது என்று தெரிந்தவுடன், போர்ச்சேவகர்கள் ஒரு கொடூரமான முடிவை எடுக்கிறார்கள். கைதிகள் நீந்தித் தப்பித்துவிட்டால் தங்களுக்குத் தண்டனை கிடைக்கும் என்று பயந்து, கைதிகள் அனைவரையும் கொன்றுபோடத் திட்டமிடுகிறார்கள். ஆனால், நூற்றுக்கு அதிபதி பவுலைக் காப்பாற்ற நினைத்து, அந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துகிறான்.
உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய இழப்பு அல்லது நெருக்கடி வரும்போது, உங்களை முழுவதுமாக அழித்துவிட வேண்டும் என்று பிசாசு திட்டமிடுவான். உடைந்த சூழ்நிலைகளில் சத்துரு தன் கடைசி அஸ்திரத்தை வீசுவான். ஆனால் தேவன், நீங்கள் சற்றும் எதிர்பாராத மனிதர்களைக் கொண்டு (நூற்றுக்கு அதிபதியைப்போல) சத்துருவின் திட்டத்தை முறியடிப்பார். பவுல் என்ற ஒரு தேவ மனிதனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, அவரோடு இருந்த மற்ற எல்லா கைதிகளின் உயிரும் தப்பியது. நீங்கள் தேவனுடைய சித்தத்தில் இருந்தால், உங்கள் மூலமாக உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.
உடைந்த துண்டுகளும் தேவனுடைய கிருபையும்
அப்போஸ்தலர் 27:43-44
“நீந்தத்தக்கவர்கள் முந்தித் தண்ணீரில் விழுந்து கரையேறவும், மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பல் துண்டுகள்மேலும் ஏறி, கரைசேரவும் கட்டளையிட்டான்…”
கப்பலில் இருந்த அனைவருக்கும் நீந்தத் தெரியாது. நீந்தத் தெரிந்தவர்கள் முதலில் குதித்துக் கரையேறினார்கள். ஆனால் நீந்தத் தெரியாத பலவீனர்கள் என்ன செய்வது? அவர்களுக்குத் தேவன் ஒரு வழியை வைத்திருந்தார். உடைந்த கப்பலின் பலகைகளையும், கப்பலின் துண்டுகளையும் பிடித்துக்கொண்டு அவர்கள் தப்பித்தார்கள்.
தேவன், “உங்கள் அனைவரின் உயிரும் தப்பும்” என்று பவுலிடம் வாக்குத்தத்தம் கொடுத்தார். ஆனால், “கப்பல் உடையாது” என்று அவர் சொல்லவில்லை. தேவன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார், ஆனால் நாம் எதிர்பார்க்கும் வழியில் அல்ல.
வாழ்க்கையில் நீங்கள் ஒருவேளை நீந்தத் தெரியாதவர் போல, எந்தத் திறமையும், பலமும் இல்லாதவராக இருக்கலாம். உங்கள் வாழ்க்கையே சுக்குநூறாக உடைந்துபோனது போலத் தோன்றலாம். ஆனால், உடைந்த உங்கள் வாழ்க்கையின் துண்டுகளைத் தூக்கியெறிந்து விடாதீர்கள்! அந்த உடைந்த துண்டுகளை வைத்துத்தான் தேவன் உங்களைக் கரைசேர்க்கப் போகிறார். உடைந்த கடந்த காலமோ, உடைந்த பொருளாதாரமோ, உடைந்த இருதயமோ – அதை தேவனிடம் கொடுங்கள், அந்த உடைந்த துண்டுகளைக் கொண்டே உங்களை ஆசீர்வாதத்தின் கரைக்குக் கொண்டுசெல்வார்.
தேவனுடைய வாக்குத்தத்தம் ஒருபோதும் தவறாது
அப்போஸ்தலர் 27:44
“…இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.”
கப்பல் உடைந்தாலும், மனிதர்கள் கொல்ல நினைத்தாலும், கடலின் அலைகள் சீறினாலும், கடைசியில் வேதம் மிக அழகாகப் பதிவு செய்கிறது: “எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்”. 276 பேரில் ஒருவர்கூட இறக்கவில்லை.
அப்போஸ்தலர் 27:22-ல் பவுல் சொன்னார்: “ உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது. “ தேவன் சொன்ன வார்த்தை அப்படியே நிறைவேறியது. தேவனுடைய வார்த்தை ஒருக்காலும் பொய்யாகாது. நீங்கள் கரையைச் சேரும் விதம் அழகாக இல்லாமல் இருக்கலாம் (ஒரு பிரம்மாண்டமான கப்பலில் போய் இறங்காமல், உடைந்த மரத்துண்டைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு போகலாம்). ஆனால் நீங்கள் சேர வேண்டிய இலக்கிற்கு தேவன் உங்களை நிச்சயம் கொண்டு சேர்ப்பார். தேவனுடைய நோக்கம் உங்களில் இருக்கும்வரை, எந்தப் புயலும் உங்களை அழிக்க முடியாது!
- நெருப்பிலிருந்து வந்த பாம்பு: உள்ளேயிருந்து வரும் அச்சுறுத்தல்
அப்போஸ்தலர் 28-ஆம் அதிகாரத்தின் தொடக்கப் பகுதி, விசுவாசிகளின் வாழ்க்கையில் வரும் எதிர்பாராத, தந்திரமான சோதனைகளைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறது. புயல் ஓய்ந்துவிட்டது என்று நாம் நினைக்கும்போது, சத்துரு எப்படிப் புதிய வடிவத்தில் தாக்குவான் என்பதை இந்தச் சம்பவம் மிகத் தெளிவாக விளக்குகிறது.
சேவையும் சத்துருவின் தாக்குதலும்
அப்போஸ்தலர் 28:3
“ பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது..”
கடுமையான புயலில் இருந்து தப்பித்து மெலித்தா தீவில் கரையேறிய பவுல், சோர்வடைந்து ஒரு ஓரத்தில் உட்காரவில்லை. மழையிலும் குளிரிலும் நடுங்கிக்கொண்டிருந்த மக்களுக்காக, அவர் விறகுகளைச் சேர்த்து நெருப்பை மூட்டுகிறார். அவர் பிறருக்குச் சேவை செய்யும்போது, அந்த நெருப்பின் வெப்பத்தினால் ஒரு கொடிய விஷப்பாம்பு வெளியே வந்து அவருடைய கையைக் கவ்விக்கொள்கிறது.
நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் எப்போதுமே எந்தப் பிரச்சினையுமில்லாமல் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் பிசாசுக்கு எந்த அச்சுறுத்தலையும் கொடுக்கவில்லை என்று அர்த்தம். ஆனால், எப்போது நீங்கள் தேவனுக்காக “நெருப்பை” (அக்கினியை) மூட்டத் தொடங்குகிறீர்களோ, எப்போது சபையின் எழுப்புதலுக்காக ஜெபிக்கிறீர்களோ, எப்போது மற்றவர்களுக்குச் சேவை செய்யத் தொடங்குகிறீர்களோ, அப்போது பிசாசானவன் உங்கள் சேவையை முடக்கத் தாக்குவான். நீங்கள் ஜெபிக்கவோ, ஊழியம் செய்யவோ முற்படும்போது எதிர்பாராத தாக்குதல்கள் வந்தால், நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
உலகம் உங்கள் மீது குத்தும் முத்திரை
அப்போஸ்தலர் 28:4
“ விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை, இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
பாம்பு கடித்ததைப் பார்த்த அந்தத் தீவின் மக்கள், உடனடியாகப் பவுலை ஒரு “கொலைபாதகன்” என்று முத்திரை குத்தினார்கள். “கடலில் இருந்து தப்பினாலும், கடவுளின் நீதி இவனைத் தண்டித்துவிட்டது” என்று தீர்ப்பளித்தார்கள்.
விசுவாசிகளாகிய நாம் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான சத்தியம் இது: உலகம் எப்போதும் உங்கள் போராட்டங்களைத் தவறாகவே புரிந்துகொள்ளும். உங்களுக்கு ஒரு தொடர் போராட்டம் வந்தால், நோய் வந்தால், அல்லது எதிர்பாராத இழப்பு ஏற்பட்டால், “இவன் ஏதோ பாவம் செய்திருக்கிறான், அதான் கடவுள் இவனைத் தண்டிக்கிறார்” என்று மனிதர்கள் உடனடியாகத் தீர்ப்பளிப்பார்கள். யோபுக்கும் இதுதான் நடந்தது. மனிதர்களின் தீர்ப்பைக் கேட்டு நீங்கள் சோர்வடையக் கூடாது; தேவன் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதே முக்கியம்.
பதற்றமில்லாத விசுவாசம்: நெருப்பிலே உதறிப்போடுங்கள்
அப்போஸ்தலர் 28:5
“ அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.”
பாம்பு கடித்தவுடன் பவுல் அலறவில்லை, பயந்து நடுங்கவில்லை, உதவி கேட்டு ஓடவில்லை. அவர் மிக அமைதியாக, அந்த விஷப்பாம்பை நெருப்பிலே உதறிப்போட்டார். அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
பிசாசு உங்கள் வாழ்க்கையைப் பற்றிக்கொள்ளும்போது – அது மனிதர்களின் அவதூறாக இருக்கலாம், நோயாக இருக்கலாம், அல்லது பொருளாதார நெருக்கடியாக இருக்கலாம் – உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. அந்த ‘விஷத்தை’ நினைத்துப் பயந்து, அது உங்கள் முழு வாழ்க்கையையும் பாதிக்க நீங்கள் அனுமதிக்கலாம்; அல்லது பவுலைப்போல, அந்தப் பிரச்சினையை தேவ பிரசன்னம் என்னும் ‘அக்கினியிலே’ உதறிப்போடலாம்.
பாம்பு கடித்தவுடன் பவுல் அந்தப் பாம்போடு சண்டையிடவில்லை. “இது ஏன் என்னைக் கடித்தது?” என்று அவர் ஆராய்ச்சி செய்யவில்லை. அவர் அதை நெருப்பில் உதறிவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தார். சத்துருவின் தாக்குதல்களையும், மனிதர்களின் விமர்சனங்களையும் தேவனுடைய பாதத்தில் உதறிவிட்டு, நீங்கள் செய்ய வேண்டிய வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்.
தேவனுடைய நோக்கம் உங்களைக் காக்கும்
அப்போஸ்தலர் 28:6
“ அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள், நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்.”
பவுல் வீங்கிச் சாவார் என்று மக்கள் காத்திருந்தார்கள். ஆனால் பல மணிநேரங்கள் கடந்தும் பவுலுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் வீங்கிச் சாவார் என்று எதிர்பார்த்த அதே மக்கள், இப்போது “இவர் ஒரு தேவன்” என்று அவரைப் போற்றுகிறார்கள்
பவுல் எப்படி அவ்வளவு நம்பிக்கையோடு இருந்தார்? ஏனென்றால், தான் ரோமாபுரிக்குச் செல்ல வேண்டும் என்பது தேவனுடைய திட்டம் என்று அவருக்குத் தெரியும். “நான் ரோமாபுரிக்குப் போக வேண்டியவன்; மெலித்தா தீவில் ஒரு பாம்புக் கடியினால் நான் சாக முடியாது” என்று அவர் உறுதியாக நம்பினார்.
தேவன் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை வைத்திருக்கும்போது, அந்த நோக்கம் நிறைவேறும் வரை பூமியில் உள்ள எந்த சக்தியாலும் உங்களை அழிக்க முடியாது. இயேசு கிறிஸ்து கொடுத்த வாக்குத்தத்தம் (மாற்கு 16:18) இங்கே நிறைவேறியது. உங்கள் வாழ்க்கையில் சத்துரு கொண்டுவரும் ‘விஷம்’ உங்களைக் கொல்வதற்காக அல்ல; உங்களைக் கொல்ல நினைத்த அதே மனிதர்களின் கண்கள் முன்பாகவே, தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்திக் காட்டவே அது அனுமதிக்கப்படுகிறது.
பவுல் வீங்கிச் சாவார் என்று மெலித்தா மக்கள் காத்திருந்தார்கள். ஆனால் பல மணிநேரங்கள் கடந்தும் பவுலுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் உயிர் பிழைத்ததால், மெலித்தா தீவில் ஒரு பெரிய எழுப்புதல் ஏற்பட்டது, தீவின் தலைவருடைய தந்தை குணமாக்கப்பட்டார் (அப்போஸ்தலர் 28:8).
உங்கள் தற்போதைய புயலும், தற்போதைய பாம்புக் கடியும் உங்களை அழிப்பதற்காக வந்தவை அல்ல. அவை ஒரு பெரிய அற்புதத்திற்கான களத்தை அமைத்துக் கொடுக்கின்றன.
- புயலால் அவரை மூழ்கடிக்க முடியவில்லை.
- கடலால் அவரைக் கொல்ல முடியவில்லை.
- பாம்பால் அவருக்கு விஷம் ஏற்ற முடியவில்லை.
ஏன்? ஏனென்றால் அவருடைய பணி இன்னும் முடிவடையவில்லை. இந்தப் பூமியில் தேவன் உங்களுக்குக் கொடுத்த நோக்கம் நிறைவேறும் வரை உங்களுக்கு மரணமில்லை. உங்கள் சிருஷ்டிகரை நம்புங்கள், பாம்பை உதறிப்போடுங்கள், உங்கள் ரோமாபுரியை (இலக்கை) நோக்கித் தொடர்ந்து பயணியுங்கள்!