ஏன் மோசே கானானுக்குள் நுழையவில்லை?

தினமும் Shorts மற்றும் எங்கள் அனைத்து வீடியோ மற்றும்  வெளியீடுகளை பெற எங்களுடைய Whatapp குரூப்பில் இனையுங்கள்.

ஒரு மனிதன் 40 ஆண்டுகள் தன் வாழ்வையே அர்ப்பணித்து, பல பாடுகளைச் சகித்து ஒரு மாபெரும் இலக்கை நோக்கி ஓடுகிறான். ஆனால், அந்த இலக்கின் வாசலை அடைந்தவுடன் தேவன் அவனிடம், “நீ எல்லாவற்றையும் பார்ப்பாய், ஆனால் உள்ளே செல்ல முடியாது” என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய வேதனை?

 

மோசே எப்படிப்பட்ட தலைவன்?

மோசேயின் சறுக்கலைப் புரிந்துகொள்ள, முதலில் அவன் எவ்வளவு பெரிய தலைவன் என்பதை நாம் அறிய வேண்டும். வேதாகமம் மோசேயைப் போல ஒரு தலைவன் இல்லை என்று சாட்சி கொடுக்கிறது.

  • மிகவும் சாந்தகுணமுள்ளவன்: மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.” (எண்ணாகமம் 12:3). தன் கோபத்தினால் சறுக்கின மோசே, அடிப்படையில் உலகத்திலேயே மிகவும் பொறுமையான மனிதனாக இருந்தான். 40 வருடங்களாக லட்சக்கணக்கான மக்களின் முறுமுறுப்புகளைச் சகித்துக்கொண்டான்.
  • தேவனிடம் முகமுகமாய்ப் பேசினவன்:  ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார் “(யாத்திராகமம் 33:11).
  • உண்மையுள்ளவன்: மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்.” (எபிரெயர் 3:5).

இவ்வளவு சிறந்த சாட்சியைப் பெற்ற ஒரு தலைவன், ஒரே ஒரு சம்பவத்தில் சறுக்கி விழுகிறான்.

 

அந்தச் சறுக்கல் எங்கே, எப்படி நடந்தது?

இந்தச் சம்பவம் இஸ்ரவேலர்களின் 40 வருடப் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் (காதேஸ் என்னும் இடத்தில்) நடக்கிறது.

  • எண்ணாகமம் 20:1-ல் மோசேயின் சகோதரியான மிரியாம் மரித்துப்போகிறாள். மோசே துக்கத்தில் இருக்கிறான். அந்த நேரத்தில்தான் ஜனங்கள் தண்ணீர் இல்லாமல் அவனுக்கு விரோதமாகக் கூடி, சண்டையிடுகிறார்கள்.
  • தேவனுடைய கட்டளை: அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள் (எண்ணாகமம் 20:8).
  • மோசேயின் செயல்: மோசே தன் பொறுமையை இழந்து, ஜனங்களைப் பார்த்து: கலகக்காரரே, கேளுங்கள் என்று கோபமாகக் கத்தி, கோலினால் கன்மலையை இரண்டுதரம் அடித்தான் (எண்ணாகமம் 20:10-11).

மிகவும் சாந்தகுணமுள்ள மனிதன், தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தேவனுடைய வார்த்தையை மீறினான்.

 

ஏன் இந்தச் சிறிய தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனை?

ஒரு பாறையை அடித்ததற்கு, கானானுக்குள் நுழையவே கூடாது என்பது பெரிய தண்டனையாகத் தோன்றலாம். ஆனால், தேவன் இதைக் கடுமையாகக் கையாள 3 ஆழமான காரணங்கள் இருந்தன:

  1. தலைவர்களுக்கான அளவுகோல் அதிகம்: தேவன் சாதாரண ஜனங்களை விட, தமக்கு ஊழியம் செய்யும் தலைவர்களிடம் அதிக உண்மையையும், கீழ்ப்படிதலையும் எதிர்பார்க்கிறார். அதிகமாகக் கொடுக்கப்பட்டவனிடத்தில் அதிகமாகக் கேட்கப்படும்.
  2. தேவனை அவமதித்தல்: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால்…” (எண்ணாகமம் 20:12). ஜனங்கள் தேவனை ஒரு அன்பான, கிருபையுள்ள தகப்பனாகப் பார்க்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். ஆனால் மோசே தன் கோபத்தின் மூலம், தேவன் பொறுமையற்றவர் போலக் காட்டினான்.
  3. பொது இடத்தில் கீழ்ப்படியாமை: தேவனுடைய மகிமை வெளிப்பட வேண்டிய இடத்தில், லட்சக்கணக்கான மக்களின் கண்களுக்கு முன்பாக மோசே தேவனின் கட்டளையை மீறினான்.

 

 

 

மோசேயின் கதறலும், தேவனின் உறுதியும்

தன் தவறை உணர்ந்த மோசே, கானானுக்குள் நுழைய அனுமதிக்கும்படி தேவனிடம் பலமுறை மன்றாடினான். இந்த உருக்கமான ஜெபத்தை மோசே உபாகமத்தில் பதிவு செய்துள்ளான்.

நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்ககும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன். (உபாகமம் 3:25)

ஆனால் தேவன் தன் தீர்ப்பில் உறுதியாக இருந்தார்:

கர்த்தர் என்னை நோக்கி: போதும்; இந்தக் காரியத்தைக் குறித்து இனி என்னோடே பேசவேண்டாம்.” (உபாகமம் 3:26)

தேவன் மோசேயை மன்னித்தார், அவரோடு தொடர்ந்து பேசினார், பரலோகத்திற்கும் ஏற்றுக்கொண்டார். ஆனால், அந்தத் தவறுக்கான விளைவை (கானானுக்குள் நுழைய முடியாததை) மோசே அனுபவித்தே ஆக வேண்டியிருந்தது.

“மேரிபாவில் உண்மையில் நடந்தது என்ன?” மோசேயின் மனநிலையையும் , சூழ்நிலையின் அழுத்தத்தையும் ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  இது வெறும் ஒரு நாள் கோபத்தின் வெளிப்பாடு அல்ல; 40 வருடங்களாக அடக்கி வைக்கப்பட்டிருந்த மன அழுத்தத்தின் வெடிப்பு. இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேதாகமம் நமக்கு சில முக்கிய திறவுகோல்களைத் தருகிறது.

 

மோசேயின் துக்கமும் சூழ்நிலையின் அழுத்தமும்

எண்ணாகமம் 20-ஆம் அதிகாரம் ஒரு மரணத்தோடுதான் தொடங்குகிறது.

  • மிரியாமின் மரணம்: அங்கே மிரியாம் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டாள் (எண்ணாகமம் 20:1). தனக்குத் தாயைப் போலவும், வழிகாட்டியாகவும் இருந்த தன் சொந்தச் சகோதரியான மிரியாமை மோசே இழந்து, மரணத்தின் துக்கத்தில் இருக்கிறான்.
  • ஒரு தலைவன் துக்கத்தில் இருக்கிறான் என்ற எந்தப் பரிதாபமும் இல்லாமல், தண்ணீர் இல்லாததால் ஜனங்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி, சண்டையிடுகிறார்கள். எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும். (எண்ணாகமம் 20:3) என்று மிகவும் கடினமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள்.

 

தேவனின் கிருபையான கட்டளை

மோசேயும் ஆரோனும் ஆசாரிப்புக் கூடாரத்தின் வாசலில் தேவனுக்கு முன்பாக முகங்குப்புற விழுகிறார்கள். தேவன் அவர்கள் மேல் கோபப்படவில்லை. தாகமாயிருக்கும் ஜனங்களுக்குத் தண்ணீர் கொடுக்கவே அவர் விரும்பினார்.

நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள், அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும், இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார். (எண்ணாகமம் 20:8)

தேவன் மிகத் தெளிவாகக் கூறுகிறார்: கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்“.

 

சங்கீதம் 106 சொல்லும் உள்ரகசியம்

மோசே ஏன் கன்மலையை அடித்தான்? ஏன் அவனால் பேச முடியவில்லை? இதற்கான மிகத் தெளிவான ஆவிக்குரிய காரணத்தை பரிசுத்த ஆவியானவர் சங்கீதத்தில் பதிவு செய்துள்ளார்.

மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள், அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது. அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான். (சங்கீதம் 106:32-33)

 

இங்கே இரண்டு காரியங்கள் நடக்கின்றன:

  1. ஆவி விசனப்பட்டது : ஜனங்களின் முறுமுறுப்பு மோசேயின் மனதை மிகவும் கசப்படையச் செய்தது. அவனுடைய சாந்தகுணம் அந்த இடத்தில் உடைந்துபோனது.
  2. உதடுகளால் பதறிப்பேசினார்: ஆவியில் ஏற்பட்ட கசப்பு, உதடுகளில் கோப வார்த்தைகளாக வெளிப்பட்டது.

 

கன்மலையண்டையில் நடந்த 3 தவறுகள்

எண்ணாகமம் 20:10-11 வசனங்களின்படி, கன்மலையண்டையில் மோசே செய்த மூன்று தவறுகள்.

  1. ஜனங்களைக் கடிந்துகொண்டது: தேவனுடைய கட்டளை, கன்மலையைப் பார்த்துப் பேசுவதே. ஆனால் மோசே கன்மலையைப் பார்த்துப் பேசுவதற்குப் பதிலாக, ஜனங்களைப் பார்த்து: கலகக்காரரே, கேளுங்கள் என்று கோபமாகக் கத்தினான்.
  2. தேவனுடைய இடத்தை தான் எடுத்துக்கொண்டது: இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் உங்களுக்குத் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொன்னான். இது ஒரு தலைவனின் ஆவிக்குரிய பெருமையைக் காட்டுகிறது. ‘தேவன் செய்வார்’ என்று சொல்லாமல், நானும் ஆரோனும் செய்கிறோம் என்ற தோரணையில் பேசினான்.
  3. கீழ்ப்படியாமை (வன்முறை): வார்த்தையினால் அற்புதம் நடக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். ஆனால் மோசே தன் கோலினால் கன்மலையை இரண்டுதரம் அடித்தான் (வசனம் 11). ஒரு முறை அல்ல, கோபத்தின் உச்சியில் இரண்டு தரம் அடித்தான்.

 

தேவனின் மாறாத கிருபை

இந்தச் சம்பவத்தில் நாம் கவனிக்க வேண்டிய மிக அழகான காரியம் ஒன்று உள்ளது. மோசே கோபப்பட்டான், கீழ்ப்படியவில்லை, தவறு செய்தான். ஆனால் கன்மலையிலிருந்து தண்ணீர் வராமல் போகவில்லை!

உடனே தண்ணீர் ஏராளமாய் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள், அவர்கள் மிருகங்களும் குடித்தது (எண்ணாகமம் 20:11)

ஊழியக்காரர்கள், தலைவர்கள் சோர்வடையும்போதும், உணர்ச்சிவசப்பட்டுத் தவறு செய்யும்போதும், தேவன் தம்முடைய ஜனங்களைத் தண்டிப்பதில்லை. மோசேயின் கீழ்ப்படியாமையினால் இஸ்ரவேல் ஜனங்களின் தாகம் தீர்க்கப்படாமல் போக தேவன் அனுமதிக்கவில்லை. தண்ணீர் ஏராளமாக வந்தது. தலைவன் மாறினாலும், தேவன் தம் ஜனங்கள் மீது வைத்திருக்கும் கிருபையில் மாறாதவராகவே இருக்கிறார்.

ஆனால் அதேசமயம், தேவனுடைய வார்த்தையை மீறியதற்காக மோசேக்கு கானான் தேசம் மறுக்கப்பட்டது. மனிதர்களின் முறுமுறுப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், அது நாம் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போவதற்கான ஒரு காரணமோ, நியாயமோ ஆக முடியாது!

 

மேரிபாவின் தண்ணீர்களண்டையில் மோசே செய்தது சாதாரண மனிதப் பார்வையிலோ அல்லது ஜனங்களின் பார்வையிலோ ஒரு சிறிய உணர்ச்சிவசப்பட்ட செயலாக தோன்றலாம்.

ஆனால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கும் தேவன், மோசேயின் அந்தச் செயலுக்குள் இருந்த 3 பெரிய ஆவிக்குரிய மீறுதல்களைக் கண்டார்.

விசுவாசியாமை (விசுவாசக்குறைவு)

மோசேயின் முதல் குற்றமாக தேவன் சுட்டிக்காட்டுவது அவனுடைய விசுவாசமின்மையைத்தான்.

எண்ணாகமம் 20:12பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.

  • மோசே தேவனை விசுவாசிக்கவில்லையா? நாற்பது வருடங்களாகப் பெரிய அற்புதங்களைக் கண்ட மோசேக்கு தேவனுடைய வல்லமை மேல் சந்தேகம் இருந்திருக்க வாய்ப்பில்லை. பின் எங்கே விசுவாசம் குறைந்தது?
  • சுமார் 40 வருடங்களுக்கு முன்பு ஓரேப் மலையில் (யாத்திராகமம் 17), தேவன் மோசேயிடம் கன்மலையை அடிக்கச் சொன்னார்; தண்ணீர் வந்தது. இப்போது கன்மலையைப் பார்த்துப் பேசச் சொன்னார். ஆனால் மோசே, தேவனுடைய தற்போதைய வார்த்தையை விசுவாசிப்பதை விட, தன்னுடைய பழைய அனுபவத்தையே (அடித்தால்தான் தண்ணீர் வரும் என்பதை) அதிகம் நம்பினான்.
  • தேவனுடைய வார்த்தையை, அவர் சொன்னபடியே நிறைவேற்றுவதே உண்மையான விசுவாசம். தேவ வார்த்தையை நம்முடைய சுய புத்தியைக் கொண்டு மாற்றுவது அவிசுவாசமாகும்.

தேவனைப் பரிசுத்தப்படுத்தாமை

தேவன் மோசேயைத் தண்டிக்கச் சொல்லும் இரண்டாவது மற்றும் மிக முக்கியமான காரணம் இதுதான்.

உபாகமம் 32:50நீங்கள் சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,…”

  • ‘பரிசுத்தப்படுத்துதல்’ என்றால் என்ன? ஜனங்களுக்கு முன்பாக தேவனுடைய உண்மையான சுபாவத்தை (அன்பு, கிருபை, இரக்கம்) சரியாக வெளிப்படுத்துவதே பரிசுத்தப்படுத்துதல் ஆகும்.
  • இந்தச் சம்பவத்தில், தேவன் தாகத்தோடு இருந்த இஸ்ரவேல் ஜனங்கள் மீது கோபமாக இல்லை. அவர் இரக்கத்தோடு தண்ணீர் தரவே விரும்பினார்.
  • ஆனால் மோசே ஜனங்களைப் பார்த்து: கலகக்காரரே, கேளுங்கள் என்று கடிந்து கொண்டு, மிகவும் கோபத்தோடு கன்மலையை இரண்டு தரம் அடித்தான்.
  • தேவனுடைய பிரதிநிதியாக நின்ற மோசே, தன் சொந்தக் கோபத்தின் மூலம், “தேவன் உங்கள் மேல் மிகவும் கோபமாக இருக்கிறார், அவர் பொறுமையற்றவர்” என்பது போல தேவனைத் தவறாகச் சித்தரித்துவிட்டான். இது தேவனுடைய பரிசுத்தத்திற்கு இழுக்கைக் கொண்டுவந்தது.

 

 

 

தேவனுடைய கட்டளையை மீறுதலும், மகிமையைத் திருடுதலும்

எண்ணாகமம் 20:24ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை.

  • கட்டளையை மீறுதல்: தேவன் ‘பேசு’ என்றார், மோசே ‘அடித்தான்’. இது நேரடியான கலகம்.
  • மகிமையைத் திருடுதல்: மோசே கோபத்தில் பயன்படுத்திய வார்த்தைகளை மிகக் கவனமாகப் பார்க்க வேண்டும். அவன் ஜனங்களைப் பார்த்து, இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் உங்களுக்குத் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ?” (எண்ணாகமம் 20:10) என்றான்.
  • பாறையிலிருந்து தண்ணீர் வரவழைப்பது தேவனால் மட்டுமே முடியும். ஆனால் மோசே ‘நானும் ஆரோனுமாகிய நாங்கள் தண்ணீர் தருவோமோ’ என்று சொல்லி, தேவனுடைய மகிமையைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டான். ஏசாயா 42:8-ல் தேவன், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன். என்று கூறுகிறார். அற்புதம் செய்யப்போகும் தேவனை மறைத்து, தன்னை முன்னிலைப்படுத்தியதால் மோசேக்கு இந்தத் தண்டனை கிடைத்தது.

 

 

மோசே கன்மலையை அடித்தது வெறும் கீழ்ப்படியாமை மட்டுமல்ல; அது தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து வைத்திருந்த ஒரு மாபெரும் தீர்க்கதரிசன வரைபடத்தை  உடைத்த செயலாகும். தேவன் இதை ஏன் இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டார்.

கன்மலை யார்?

பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்களோடு கூடவே பயணம் செய்த அந்தக் கன்மலை வெறும் பாறை அல்ல, அது இயேசு கிறிஸ்துவின் நிழலாட்டம் என்பதைப் புதிய ஏற்பாடு மிகத் தெளிவாகக் கூறுகிறது.

1 கொரிந்தியர் 10:4எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள், அந்தக் கன்மலை கிறிஸ்துவே.”

இதை மனதில் வைத்துக்கொண்டு, இஸ்ரவேலர்களின் பயணத்தில் நடந்த இரண்டு சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ஓரேப் மலையில் அடிக்கப்பட்ட கன்மலை (யாத்திராகமம் 17)

சுமார் 40 வருடங்களுக்கு முன்பு, ஓரேப் மலையில் ஜனங்கள் தண்ணீர் இல்லாமல் தவித்தபோது, தேவன் மோசேயிடம் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்:

யாத்திராகமம் 17:6அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன், நீ அந்தக் கன்மலையை அடி, அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார், அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.”

இங்கே தேவன் கன்மலையை அடிக்கச்” சொன்னார். இது கல்வாரிச் சிலுவையில் இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் அடிக்கப்படுவதைக் குறிக்கிறது.

  • ஏசாயா 53:4மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.”
  • கிறிஸ்துவாகிய கன்மலை சிலுவையில் அடிக்கப்பட்டதால்தான், இன்று நமக்கு ஜீவத்தண்ணீராகிய இரட்சிப்பும், பரிசுத்த ஆவியானவரும் கிடைத்துள்ளது.

காதேசிலே பேசச்சொன்ன கன்மலை (எண்ணாகமம் 20)

40 வருடங்களுக்குப் பிறகு, இப்போது காதேஸ் என்னும் இடத்தில் மீண்டும் தண்ணீர் தேவைப்படுகிறது. இப்போது தேவன் மோசேயிடம் என்ன சொல்கிறார் பாருங்கள்:

எண்ணாகமம் 20:8நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள், அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்@ இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்..”

  • கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக ஒரே ஒரு முறை மட்டுமே சிலுவையில் அடிக்கப்பட வேண்டும். அவர் மீண்டும் மீண்டும் சிலுவையில் அறையப்பட வேண்டியதில்லை.
  • எபிரெயர் 10:10இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.”
  • கன்மலை (கிறிஸ்து) ஏற்கனவே அடிக்கப்பட்டு விட்டார். இப்போது அவர் உயிர்த்தெழுந்து இருக்கிறார். இனி நாம் அவரிடமிருந்து கிருபையைப் பெற அவரை அடிக்க வேண்டியதில்லை; விசுவாசத்தோடு அவரிடம் பேசினால் (ஜெபித்தால்) மட்டுமே போதுமானது.

மோசேயின் மாபெரும் தவறு (தீர்க்கதரிசனத்தை உடைத்தல்)

இப்போது மோசே செய்த தவறு எவ்வளவு பெரியது என்று பாருங்கள். மோசே கன்மலையைப் பார்த்துப் பேசுவதற்குப் பதிலாக, கோபத்தில் அந்தப் பாறையை இரண்டுதரம் அடித்தான் (எண்ணாகமம் 20:11).

தேவன் ஏன் இவ்வளவு கடுமையாகத் தண்டித்தார்? மோசேயின் இந்தச் செயல், இயேசு கிறிஸ்துவின் “ஒரேதரம் செய்யப்பட்ட சிலுவைப் பலி” போதாது, அவரை மறுபடியும் சிலுவையில் அறைய வேண்டும் என்று சொல்வதற்குச் சமமாக இருந்தது.

புதிய ஏற்பாடு இதை மிகக் கடுமையாக எச்சரிக்கிறது:

எபிரெயர் 6:6மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.”

மோசே கோபத்தில் செய்த ஒரு செயல், பிதாவாகிய தேவன் தன் குமாரனைப் பற்றி வைத்திருந்த மிக அழகான தீர்க்கதரிசனப் படத்தைக் (Picture of Grace) கெடுத்துவிட்டது. தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தைத் தவறாகக் காண்பித்ததால்தான், மோசே கானானுக்குள் நுழைய தேவன் அனுமதிக்கவில்லை.

மோசே கானானுக்குள் நுழைய முடியாததற்கு வெறும் அவனுடைய கோபம் மட்டும் காரணமல்ல; தேவன் இதன் மூலம் முழு மனிதகுலத்திற்கும் ஒரு மாபெரும் ஆவிக்குரிய சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கிறார்.

நியாயப்பிரமாணம் (The Law) என்றால் என்ன, கிருபை (Grace) என்றால் என்ன ?

மோசே: நியாயப்பிரமாணத்தின் அடையாளம்

வேதாகமத்தில் மோசே என்பவர் வெறும் ஒரு மனிதன் மட்டுமல்ல, அவர் ‘நியாயப்பிரமாணத்தின்’ அடையாளமாக இருக்கிறார்.

யோவான் 1:17எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின..”

  • நியாயப்பிரமாணம் பரிசுத்தமானது, சரியானது. ஆனால், மனிதன் தன் மாம்ச பலவீனத்தினால் நியாயப்பிரமாணத்தின்படி நூற்றுக்கு நூறு சதவீதம் சரியாக வாழ முடியாது.
  • நியாயப்பிரமாணத்தின் விதிப்படி, ஒரு சிறு தவறு செய்தாலும் தண்டனை நிச்சயம். மோசே தன் வாழ்நாள் முழுவதும் உண்மையாக இருந்தாலும், ஒரே ஒரு முறை தேவனுடைய வார்த்தையை மீறியதால் கானான் தேசத்தை இழந்தான்.
  • நம்முடைய சொந்த நற்கிரியைகளினாலோ, நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதினாலோ நாம் ஒருபோதும் பரலோக ராஜ்ஜியமாகிய கானானுக்குள் நுழைய முடியாது.

நியாயப்பிரமாணம் எல்லையோடு நின்றுவிடும்

மோசே இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து (பாவத்திலிருந்து) வெளியே கொண்டுவந்தான். செங்கடலைக் கடக்கச் செய்தான். 40 வருடம் வனாந்தரத்தில் நடத்தினான். ஆனால், கானான் தேசத்தின் எல்லையான யோர்தான் நதி வரை மட்டுமே அவனால் அவர்களைக் கொண்டுவர முடிந்தது. அவனால் அவர்களை உள்ளே அழைத்துச் செல்ல முடியவில்லை.

ரோமர் 8:3அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்..”

  • நியாயப்பிரமாணம் நமக்கு எது பாவம் என்று சுட்டிக்காட்டுமே தவிர, பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்காது. அது நம்மை இரட்சிப்பின் எல்லை வரை கொண்டுவருமே தவிர, பரலோகத்திற்குள் அழைத்துச் செல்ல முடியாது. மோசே (நியாயப்பிரமாணம்) யோர்தானுக்கு அப்புறமே நின்றுவிட வேண்டியதாயிற்று.

 

யோசுவா: கிருபையின் (இயேசுவின்) அடையாளம்

மோசேயினால் முடியாததை யார் செய்து முடித்தது? மோசேக்குப் பின்பு வந்த யோசுவா, ஜனங்களைக் கானானுக்குள் அழைத்துச் சென்றான். இதில் உள்ள ஆச்சரியமான ரகசியம் என்னவென்றால்:

  • எபிரெய மொழியில் யோசுவா” (Yehoshua) என்றால் “கர்த்தர் இரட்சிக்கிறார்” என்று அர்த்தம்.
  • இதே பெயரின் கிரேக்க மொழிபெயர்ப்புதான் இயேசு” (Iesous).
  • யோசுவாவும் இயேசுவும் ஒரே பெயர்தான்!
  • நியாயப்பிரமாணம் (மோசே) முடிக்க முடியாததை, கிருபை (இயேசு/யோசுவா) செய்து முடிக்கிறது! நமது சொந்த நீதியினால் பரலோகத்திற்குள் நுழைய முடியாத நம்மை, இயேசு கிறிஸ்துவின் கிருபை மட்டுமே வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குள் (பரலோகத்திற்குள்) அழைத்துச் செல்ல முடியும்.

கிருபையினால் கானானுக்குள் நுழைந்த மோசே! (மிக அழகான முடிவு)

மோசே கானானுக்குள் நுழையவே இல்லையா? நியாயப்பிரமாணத்தின் கீழ், தன்னுடைய சொந்த தகுதியினால் அவனால் நுழைய முடியவில்லை. ஆனால், சுமார் 1400 வருடங்களுக்குப் பிறகு ஒரு மாபெரும் அற்புதம் நடந்தது.

மத்தேயு 17:1-3ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும்  கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,  அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார், அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.  அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

  • இந்த மறுரூப மலை எங்கே இருக்கிறது? அது கானான் தேசத்திற்கு உள்ளே இருக்கிறது!
  • 1400 வருடங்களுக்கு முன் யோர்தானுக்கு அப்புறம் நிறுத்தப்பட்ட மோசே, இப்போது கானான் தேசத்திற்கு உள்ளே நிற்கிறான்! எப்படி?
  • அவன் கையில் நியாயப்பிரமாணப் பலகைகளோ, கோபத்தில் அடித்த கோலோ இல்லை. அவன் கிருபையாகிய இயேசு கிறிஸ்துவோடு நிற்கிறான். நியாயப்பிரமாணத்தினால் முடியாததை தேவனுடைய கிருபை மோசேக்குச் செய்து கொடுத்தது.

ஒரு கொடிய விஷப்பாம்பு உங்களைக் கடித்தால் என்ன ஆகும்?

தினமும் Shorts மற்றும் எங்கள் அனைத்து வீடியோ மற்றும்  வெளியீடுகளை பெற எங்களுடைய Whatapp குரூப்பில் இனையுங்கள்.

வேதப்பகுதி: அப்போஸ்தலர் 27 மற்றும் 28-ஆம் அதிகாரங்கள்

தேவன் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை வைத்திருக்கும்போது, இயற்கையின் சீற்றங்களோ, சூழ்நிலைகளின் அழுத்தங்களோ அல்லது சத்துருவின் நஞ்சோ உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது.

கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு பெரிய கேள்வி: “ஏன் அடுத்தடுத்து போராட்டங்கள் வருகின்றன?” ஒரு பெரிய புயலில் இருந்து தப்பித்தோம் என்று பெருமூச்சு விடுவதற்குள், அடுத்த சோதனை வருகிறது. இது பல விசுவாசிகளின் நிஜ வாழ்க்கை அனுபவம்.

அப்போஸ்தலர் 27 மற்றும் 28 அதிகாரங்களில் பவுலின் வாழ்க்கை 14 நாட்கள் மரணப் போராட்டம், கப்பல் சேதம், நீந்திக் கரைசேர்ந்த களைப்பு. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம் என்று நெருப்பு மூட்டினால், அங்கே ஒரு கொடிய விஷப்பாம்பு! “ஆண்டவரே, இதைவிட நான் கடலிலேயே இறந்திருக்கலாமே” என்று முறுமுறுக்கக் கூடிய சூழ்நிலை. ஆனால் பவுலின் எதிர்வினை, வேதாகமத்தின் மிக ஆழமான சத்தியங்களில் ஒன்றைக் கற்பிக்கிறது. தேவன் நம்முடைய வாழ்வில் ஒரு நோக்கத்தை வைத்திருந்தால், அந்த நோக்கம் நிறைவேறும் வரை பூமியில் உள்ள எந்த சக்தியாலும் நம்மை அழிக்க முடியாது.

 

  1. இயற்கையின் சீற்றம்: புயலின் நடுவில் தேவனுடைய சித்தம்

அப்போஸ்தலர் 27-ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள கப்பற்சேதம், வேதாகமத்தில் உள்ள மிகத் துல்லியமான கடல் பயணப் பதிவுகளில் ஒன்றாகும். இந்த ஒரு சம்பவம், நம்முடைய வாழ்க்கையில் வரும் புயல்களைப் பற்றியும், அதில் தேவனுடைய சித்தம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றியும் பல ஆழமான சத்தியங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

 

மனித ஆலோசனையா? தேவனுடைய எச்சரிப்பா?

அப்போஸ்தலர் 27:10-11

அவர்களை நோக்கி: மனுஷரே, இந்தப் பிரயாணத்தினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமுமுண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று எச்சரித்தான். நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப்பார்க்கிலும், மாலுமியையும் கப்பல் எஜமானனையும் அதிகமாய் நம்பினான்.”

கப்பல் புறப்படுவதற்கு முன்பே, இது ஆபத்தான பயணம் என்று தேவன் பவுலின் மூலமாக எச்சரிக்கிறார். ஆனால் நூற்றுக்கு அதிபதியோ, ஒரு தேவ மனிதனின் வார்த்தையை விட, உலக அறிவில் சிறந்த மாலுமியையும் , கப்பலின் உரிமையாளரையும் அதிகம் நம்பினான்.

நம்முடைய வாழ்க்கையில் பல புயல்கள் வருவதற்கு முக்கியக் காரணம், தேவனுடைய வார்த்தையை விட உலகத்தின் நிபுணர்களையும், அறிவாளிகளையும் நாம் அதிகம் நம்புவதுதான். உலகம் ஒரு பாதையை “மிகவும் பாதுகாப்பானது, லாபகரமானது” என்று சொன்னாலும், தேவன் அதை “ஆபத்து” என்று தடுத்தால், நாம் தேவனுடைய சத்தத்துக்கே கீழ்ப்படிய வேண்டும்.

 

ஏமாற்றும் தென்றலும், எதிர்பாராத கடுங்காற்றும்

அப்போஸ்தலர் 27:13-14

தென்றல் மெதுவாயடித்தபடியினால், தாங்கள் கோரியது கைகூடிவந்ததென்று எண்ணி, நங்கூரத்தை எடுத்து, கிரேத்தாதீவின் கரையோரமாகப் போனார்கள். கொஞ்சநேரத்துக்குள்ளாக யூரோக்கிலிடன் என்னும் கடுங்காற்று அதின்மேல் மோதிற்று.”

அவர்கள் தேவனுடைய வார்த்தையை மீறிப் பயணத்தைத் தொடங்கியபோது ஆரம்பத்தில் “தென்றல் காற்று” மிக மெதுவாகவும் இதமாகவும் வீசியது. “பார்த்தீர்களா, நாம் எடுத்த முடிவு சரியானதுதான்” என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அந்த மெதுவான காற்று ஒரு மிகப்பெரிய ஏமாற்று வேலை. கொஞ்ச நேரத்திற்குள்ளாக ‘யூரோக்கிலிடன்’ (சூறாவளி போன்ற பயங்கரமான புயல்) அவர்களைத் தாக்கியது.

தேவனுக்குச் சித்தமில்லாத தவறான முடிவுகளும், பாவ வழிகளும் ஆரம்பத்தில் ‘தென்றலை’ போல மிகவும் இதமாக, லாபகரமாகத் தான் தோன்றும். எல்லாம் சரியாக நடப்பது போலத் தெரியும். ஆனால், அந்தச் சுகமான தென்றலுக்குப் பின்னால் அழிவின் புயல் மறைந்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

 

உலகத்தின் பலம் தோற்றுப்போகும் தருணம்

அப்போஸ்தலர் 27:18-20

நாங்கள் பெருங்காற்றினாலே மிகவும் அலைக்கழிக்கப்பட்டபடியினால், மறுநாளிலே சில சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள். மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே தூக்கி எறிந்தோம். அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், பெருங்காற்றும் மழையும் அடித்துக்கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போம் என்கிற நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று.”

புயல் வந்தவுடன் அந்த அனுபவமிக்க மாலுமிகள் தங்கள் உயிரைக் காப்பாற்ற என்ன செய்தார்கள்? வியாபாரத்திற்காக ஆசையாகக் கொண்டுவந்த சரக்குகளைக்   கடலில் எறிந்தார்கள். கடைசியாக, தங்கள் தொழிலின் ஆதாரமான கப்பலின் தளவாடங்களையே வீசி எறிந்தார்கள். பல நாட்கள் சூரியனும் தெரியவில்லை, நட்சத்திரமும் தெரியவில்லை. காரிருள்! பிழைப்போம் என்ற நம்பிக்கை முழுவதுமாக அற்றுப்போனது.

வாழ்க்கையில் மரணத்தை தொடும் அளவிலான ஒரு பெரிய புயல் வரும்போது, மனிதன் சேர்த்து வைத்த பணம், பதவி, கல்வி, செல்வாக்கு எதுவுமே அவனைக் காப்பாற்ற முடியாது. “என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என் சொத்து முழுவதையும் கொடுக்க நான் தயார்” என்று மனிதன் தன் சுய பலத்தின் எல்லைக்கு வரும்போதுதான், அவனுக்குத் தேவனுடைய கிருபை தேவைப்படுகிறது.

 

இருளில் தேவனுடைய சத்தம்

அப்போஸ்தலர் 27:23

ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று…”

எல்லாரும் நம்பிக்கையிழந்து, இருளில் மரணத்திற்காகக் காத்துக்கொண்டிருந்த அந்த இரவில், பவுல் எழுந்து நிற்கிறார். அவர் தன்னை எப்படி அறிமுகப்படுத்துகிறார் என்பதைக் கவனியுங்கள்.   “ என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான

புயலின் நடுவில் நீங்கள் எவ்வளவு பெரிய ஆள் என்பதை விட, நீங்கள் யாருக்குச் சொந்தமானவர்கள் என்பதே உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும். நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் என்றால், அந்தப் புயலின் நடுவிலும் உங்களைப் பாதுகாக்க வேண்டியது அவருடைய பொறுப்பு. உலக மக்கள் புயலைக் கண்டு பயந்து நடுங்கும்போது, ஒரு தேவ பிள்ளை புயலின் நடுவிலும் தேவ தூதனின் தரிசனத்தைக் காண்பான்.

 

தேவன் கொடுத்த நோக்கமே உங்களைப் பாதுகாக்கும் கவசம்

அப்போஸ்தலர் 27:24

பவுலே, பயப்படாதே; நீ ராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும்; இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.”

தேவன் பவுலிடம் “நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று மட்டும் சொல்லவில்லை. அதற்கான காரணத்தையும் சொல்கிறார்: “நீ ராயனுக்கு (ரோமப் பேரரசனுக்கு) முன்பாக நிற்கவேண்டும்.” ரோமாபுரியில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டிய ஒரு பணி பவுலுக்கு மீதம் இருந்தது. அந்தப் பணி முடியும் வரை, உலகத்தின் எந்தக் கடலும் பவுலை மூழ்கடிக்க முடியாது.

தேவன் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை வைத்திருக்கும்போது, புயல் உங்களை அழிக்க முடியாது. மாறாக, அந்தப் புயலே உங்களை உங்கள் இலக்கில்  சீக்கிரமாகக் கொண்டு சேர்க்கும் ஒரு வாகனமாகப் பயன்படுகிறது. தேவன் உங்கள் மேல் வைத்த நோக்கத்தினிமித்தம், உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் அவர் ஆசீர்வதித்துப் பாதுகாப்பார்.

 

  1. உடைந்த துண்டுகள்: இழப்புகளின் வழியே இரட்சிப்பு

அப்போஸ்தலர் 27-ஆம் அதிகாரத்தின் இறுதிப் பகுதி, நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகளையும், உடைந்த சூழ்நிலைகளையும் தேவன் எப்படி நம்முடைய இரட்சிப்பிற்கும், ஆசீர்வாதத்திற்கும் பயன்படுத்துகிறார் என்பதை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

 

நாம் நம்பியிருந்த ‘கப்பல்’ உடையும் தருணம்

அப்போஸ்தலர் 27:41

இருபுறமும் கடல்மோதும் ஒரு மேட்டிலே கப்பலை விழத்தள்ளினார்கள்; முன்னணியம் ஊன்றி அசையாமலிருந்தது, பின்னணியம் அலைகளின் பலத்தினாலே உடைந்துபோயிற்று.”

பதினான்கு நாட்களாக அவர்களைச் சுமந்து வந்த கப்பல், இப்போது ஒரு மேட்டில் தட்டி நிற்கிறது. கப்பலின் முன்பகுதி (முன்னணியம்) அசையாமல் சிக்கிக்கொண்டது. ஆனால் பின்பகுதி (பின்னணியம்) அலைகளின் பயங்கரமான பலத்தினால் சுக்குநூறாக உடையத் தொடங்குகிறது. அவர்கள் இதுவரை பாதுகாப்பாக நம்பியிருந்த கப்பல், இப்போது கண்முன்னே அழிகிறது.

வாழ்க்கையில் சில நேரங்களில், நாம் மிகவும் பாதுகாப்பானது என்று நம்பியிருந்த ‘கப்பல்களை’ தேவன் உடைய அனுமதிக்கிறார். அது ஒரு வேலையாக இருக்கலாம், நாம் நம்பியிருந்த மனிதர்களாக இருக்கலாம், அல்லது நமது சொந்த பலமாக இருக்கலாம். நாம் தேவனிலும் அதிகமாக அந்த உலகக் காரியங்களை நம்பத் தொடங்கும்போது, அந்தத் தவறான நம்பிக்கையை உடைத்து, ‘தேவன் ஒருவரே நமது தஞ்சம்’ என்பதைப் புரியவைக்கவே இப்படிப்பட்ட இழப்புகளை அவர் அனுமதிக்கிறார்.

 

சத்துருவின் திட்டம் தடுத்து நிறுத்தப்படுதல்

அப்போஸ்தலர் 27:42-43

காவல்பண்ணப்பட்டவர்களில் ஒருவனும் நீந்தித் தப்பிப்போகாதபடிக்கு, அவர்களைக் கொன்றுபோடவேண்டுமென்று போர்ச்சேவகர் யோசனையாயிருந்தார்கள். நூற்றுக்கு அதிபதி பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து…”

கப்பல் உடைகிறது என்று தெரிந்தவுடன், போர்ச்சேவகர்கள் ஒரு கொடூரமான முடிவை எடுக்கிறார்கள். கைதிகள் நீந்தித் தப்பித்துவிட்டால் தங்களுக்குத் தண்டனை கிடைக்கும் என்று பயந்து, கைதிகள் அனைவரையும் கொன்றுபோடத் திட்டமிடுகிறார்கள். ஆனால், நூற்றுக்கு அதிபதி பவுலைக் காப்பாற்ற நினைத்து, அந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துகிறான்.

உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய இழப்பு அல்லது நெருக்கடி வரும்போது, உங்களை முழுவதுமாக அழித்துவிட வேண்டும் என்று பிசாசு திட்டமிடுவான். உடைந்த சூழ்நிலைகளில் சத்துரு தன் கடைசி அஸ்திரத்தை வீசுவான். ஆனால் தேவன், நீங்கள் சற்றும் எதிர்பாராத மனிதர்களைக் கொண்டு (நூற்றுக்கு அதிபதியைப்போல) சத்துருவின் திட்டத்தை முறியடிப்பார். பவுல் என்ற ஒரு தேவ மனிதனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, அவரோடு இருந்த மற்ற எல்லா கைதிகளின் உயிரும் தப்பியது. நீங்கள் தேவனுடைய சித்தத்தில் இருந்தால், உங்கள் மூலமாக உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

 

உடைந்த துண்டுகளும் தேவனுடைய கிருபையும்

அப்போஸ்தலர் 27:43-44

நீந்தத்தக்கவர்கள் முந்தித் தண்ணீரில் விழுந்து கரையேறவும், மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பல் துண்டுகள்மேலும் ஏறி, கரைசேரவும் கட்டளையிட்டான்…”

கப்பலில் இருந்த அனைவருக்கும் நீந்தத் தெரியாது. நீந்தத் தெரிந்தவர்கள் முதலில் குதித்துக் கரையேறினார்கள். ஆனால் நீந்தத் தெரியாத பலவீனர்கள் என்ன செய்வது? அவர்களுக்குத் தேவன் ஒரு வழியை வைத்திருந்தார். உடைந்த கப்பலின் பலகைகளையும், கப்பலின் துண்டுகளையும் பிடித்துக்கொண்டு அவர்கள் தப்பித்தார்கள்.

தேவன், “உங்கள் அனைவரின் உயிரும் தப்பும்” என்று பவுலிடம் வாக்குத்தத்தம் கொடுத்தார். ஆனால், “கப்பல் உடையாது” என்று அவர் சொல்லவில்லை. தேவன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார், ஆனால் நாம் எதிர்பார்க்கும் வழியில் அல்ல.

வாழ்க்கையில் நீங்கள் ஒருவேளை நீந்தத் தெரியாதவர் போல, எந்தத் திறமையும், பலமும் இல்லாதவராக இருக்கலாம். உங்கள் வாழ்க்கையே சுக்குநூறாக உடைந்துபோனது போலத் தோன்றலாம். ஆனால், உடைந்த உங்கள் வாழ்க்கையின் துண்டுகளைத் தூக்கியெறிந்து விடாதீர்கள்! அந்த உடைந்த துண்டுகளை வைத்துத்தான் தேவன் உங்களைக் கரைசேர்க்கப் போகிறார். உடைந்த கடந்த காலமோ, உடைந்த பொருளாதாரமோ, உடைந்த இருதயமோ – அதை தேவனிடம் கொடுங்கள், அந்த உடைந்த துண்டுகளைக் கொண்டே உங்களை ஆசீர்வாதத்தின் கரைக்குக் கொண்டுசெல்வார்.

 

தேவனுடைய வாக்குத்தத்தம் ஒருபோதும் தவறாது

அப்போஸ்தலர் 27:44

“…இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.”

கப்பல் உடைந்தாலும், மனிதர்கள் கொல்ல நினைத்தாலும், கடலின் அலைகள் சீறினாலும், கடைசியில் வேதம் மிக அழகாகப் பதிவு செய்கிறது: “எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்”. 276 பேரில் ஒருவர்கூட இறக்கவில்லை.

அப்போஸ்தலர் 27:22-ல் பவுல் சொன்னார்: உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது. “ தேவன் சொன்ன வார்த்தை அப்படியே நிறைவேறியது. தேவனுடைய வார்த்தை ஒருக்காலும் பொய்யாகாது. நீங்கள் கரையைச் சேரும் விதம் அழகாக இல்லாமல் இருக்கலாம் (ஒரு பிரம்மாண்டமான கப்பலில் போய் இறங்காமல், உடைந்த மரத்துண்டைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு போகலாம்). ஆனால் நீங்கள் சேர வேண்டிய இலக்கிற்கு தேவன் உங்களை நிச்சயம் கொண்டு சேர்ப்பார். தேவனுடைய நோக்கம் உங்களில் இருக்கும்வரை, எந்தப் புயலும் உங்களை அழிக்க முடியாது!

 

  1. நெருப்பிலிருந்து வந்த பாம்பு: உள்ளேயிருந்து வரும் அச்சுறுத்தல்

அப்போஸ்தலர் 28-ஆம் அதிகாரத்தின் தொடக்கப் பகுதி, விசுவாசிகளின் வாழ்க்கையில் வரும் எதிர்பாராத, தந்திரமான சோதனைகளைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறது. புயல் ஓய்ந்துவிட்டது என்று நாம் நினைக்கும்போது, சத்துரு எப்படிப் புதிய வடிவத்தில் தாக்குவான் என்பதை இந்தச் சம்பவம் மிகத் தெளிவாக விளக்குகிறது.

 

சேவையும் சத்துருவின் தாக்குதலும்

அப்போஸ்தலர் 28:3

பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது..”

கடுமையான புயலில் இருந்து தப்பித்து மெலித்தா தீவில் கரையேறிய பவுல், சோர்வடைந்து ஒரு ஓரத்தில் உட்காரவில்லை. மழையிலும் குளிரிலும் நடுங்கிக்கொண்டிருந்த மக்களுக்காக, அவர் விறகுகளைச் சேர்த்து நெருப்பை மூட்டுகிறார். அவர் பிறருக்குச் சேவை செய்யும்போது, அந்த நெருப்பின் வெப்பத்தினால் ஒரு கொடிய விஷப்பாம்பு வெளியே வந்து அவருடைய கையைக் கவ்விக்கொள்கிறது.

நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் எப்போதுமே எந்தப் பிரச்சினையுமில்லாமல் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் பிசாசுக்கு எந்த அச்சுறுத்தலையும் கொடுக்கவில்லை என்று அர்த்தம். ஆனால், எப்போது நீங்கள் தேவனுக்காக “நெருப்பை” (அக்கினியை) மூட்டத் தொடங்குகிறீர்களோ, எப்போது சபையின் எழுப்புதலுக்காக ஜெபிக்கிறீர்களோ, எப்போது மற்றவர்களுக்குச் சேவை செய்யத் தொடங்குகிறீர்களோ, அப்போது பிசாசானவன் உங்கள் சேவையை முடக்கத் தாக்குவான். நீங்கள் ஜெபிக்கவோ, ஊழியம் செய்யவோ முற்படும்போது எதிர்பாராத தாக்குதல்கள் வந்தால், நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

உலகம் உங்கள் மீது குத்தும் முத்திரை

அப்போஸ்தலர் 28:4

விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை, இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

பாம்பு கடித்ததைப் பார்த்த அந்தத் தீவின் மக்கள், உடனடியாகப் பவுலை ஒரு “கொலைபாதகன்” என்று முத்திரை குத்தினார்கள். “கடலில் இருந்து தப்பினாலும், கடவுளின் நீதி இவனைத் தண்டித்துவிட்டது” என்று தீர்ப்பளித்தார்கள்.

விசுவாசிகளாகிய நாம் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான சத்தியம் இது: உலகம் எப்போதும் உங்கள் போராட்டங்களைத் தவறாகவே புரிந்துகொள்ளும். உங்களுக்கு ஒரு தொடர் போராட்டம் வந்தால், நோய் வந்தால், அல்லது எதிர்பாராத இழப்பு ஏற்பட்டால், “இவன் ஏதோ பாவம் செய்திருக்கிறான், அதான் கடவுள் இவனைத் தண்டிக்கிறார்” என்று மனிதர்கள் உடனடியாகத் தீர்ப்பளிப்பார்கள். யோபுக்கும் இதுதான் நடந்தது. மனிதர்களின் தீர்ப்பைக் கேட்டு நீங்கள் சோர்வடையக் கூடாது; தேவன் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதே முக்கியம்.

 

பதற்றமில்லாத விசுவாசம்: நெருப்பிலே உதறிப்போடுங்கள்

அப்போஸ்தலர் 28:5

அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.”

பாம்பு கடித்தவுடன் பவுல் அலறவில்லை, பயந்து நடுங்கவில்லை, உதவி கேட்டு ஓடவில்லை. அவர் மிக அமைதியாக, அந்த விஷப்பாம்பை நெருப்பிலே உதறிப்போட்டார். அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

பிசாசு உங்கள் வாழ்க்கையைப் பற்றிக்கொள்ளும்போது – அது மனிதர்களின் அவதூறாக இருக்கலாம், நோயாக இருக்கலாம், அல்லது பொருளாதார நெருக்கடியாக இருக்கலாம் – உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. அந்த ‘விஷத்தை’ நினைத்துப் பயந்து, அது உங்கள் முழு வாழ்க்கையையும் பாதிக்க நீங்கள் அனுமதிக்கலாம்; அல்லது பவுலைப்போல, அந்தப் பிரச்சினையை தேவ பிரசன்னம் என்னும் ‘அக்கினியிலே’ உதறிப்போடலாம்.

பாம்பு கடித்தவுடன் பவுல் அந்தப் பாம்போடு சண்டையிடவில்லை. “இது ஏன் என்னைக் கடித்தது?” என்று அவர் ஆராய்ச்சி செய்யவில்லை. அவர் அதை நெருப்பில் உதறிவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தார். சத்துருவின் தாக்குதல்களையும், மனிதர்களின் விமர்சனங்களையும் தேவனுடைய பாதத்தில் உதறிவிட்டு, நீங்கள் செய்ய வேண்டிய வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்.

 

தேவனுடைய நோக்கம் உங்களைக் காக்கும்

அப்போஸ்தலர் 28:6

அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள், நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்.”

பவுல் வீங்கிச் சாவார் என்று மக்கள் காத்திருந்தார்கள். ஆனால் பல மணிநேரங்கள் கடந்தும் பவுலுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் வீங்கிச் சாவார் என்று எதிர்பார்த்த அதே மக்கள், இப்போது “இவர் ஒரு தேவன்” என்று அவரைப் போற்றுகிறார்கள்

பவுல் எப்படி அவ்வளவு நம்பிக்கையோடு இருந்தார்? ஏனென்றால், தான் ரோமாபுரிக்குச் செல்ல வேண்டும் என்பது தேவனுடைய திட்டம் என்று அவருக்குத் தெரியும். “நான் ரோமாபுரிக்குப் போக வேண்டியவன்; மெலித்தா தீவில் ஒரு பாம்புக் கடியினால் நான் சாக முடியாது” என்று அவர் உறுதியாக நம்பினார்.

தேவன் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை வைத்திருக்கும்போது, அந்த நோக்கம் நிறைவேறும் வரை பூமியில் உள்ள எந்த சக்தியாலும் உங்களை அழிக்க முடியாது. இயேசு கிறிஸ்து கொடுத்த வாக்குத்தத்தம் (மாற்கு 16:18) இங்கே நிறைவேறியது. உங்கள் வாழ்க்கையில் சத்துரு கொண்டுவரும் ‘விஷம்’ உங்களைக் கொல்வதற்காக அல்ல; உங்களைக் கொல்ல நினைத்த அதே மனிதர்களின் கண்கள் முன்பாகவே, தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்திக் காட்டவே அது அனுமதிக்கப்படுகிறது.

பவுல் வீங்கிச் சாவார் என்று மெலித்தா மக்கள் காத்திருந்தார்கள். ஆனால் பல மணிநேரங்கள் கடந்தும் பவுலுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் உயிர் பிழைத்ததால், மெலித்தா தீவில் ஒரு பெரிய எழுப்புதல் ஏற்பட்டது, தீவின் தலைவருடைய தந்தை குணமாக்கப்பட்டார் (அப்போஸ்தலர் 28:8).

உங்கள் தற்போதைய புயலும், தற்போதைய பாம்புக் கடியும் உங்களை அழிப்பதற்காக வந்தவை அல்ல. அவை ஒரு பெரிய அற்புதத்திற்கான களத்தை அமைத்துக் கொடுக்கின்றன.

  • புயலால் அவரை மூழ்கடிக்க முடியவில்லை.
  • கடலால் அவரைக் கொல்ல முடியவில்லை.
  • பாம்பால் அவருக்கு விஷம் ஏற்ற முடியவில்லை.

ஏன்? ஏனென்றால் அவருடைய பணி இன்னும் முடிவடையவில்லை. இந்தப் பூமியில் தேவன் உங்களுக்குக் கொடுத்த நோக்கம் நிறைவேறும் வரை உங்களுக்கு மரணமில்லை. உங்கள் சிருஷ்டிகரை நம்புங்கள், பாம்பை உதறிப்போடுங்கள், உங்கள் ரோமாபுரியை (இலக்கை) நோக்கித் தொடர்ந்து பயணியுங்கள்!